தட்டை முறுக்கு:
மாலை நேர சிற்றுண்டி கொரிக்க சுவையான இந்த தட்டை முறுக்கு காப்பியுடன் நல்ல பொருத்தமானது.குழந்தைகள் விரும்பி ஏற்கும் ஒரு எளிய பலகாரம் என்று சொல்லலாம். விசேஷ நாட்களில் செய்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு-1 கோப்பை
பொட்டுக்கடலை மாவு-1 1/2 மேஜைக்கரண்டி
உளுந்தமாவு-1 1/2 மேஜைக்கரண்டி
உப்பு-1/2 தே க
மிளகாய்ப்பொடி-1 தே க
சீரகம் அல்லது ஓமம்-1/2 தே க
வெண்ணை -2 தே க
கடலைப்பருப்பு-1மேஜைக்கரண்டி
செய்முறை:
1. அரிசி மாவு வீட்டில் செய்தது சிறப்பான பலனைத்தரும்.
அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி ஒரு சுத்தமான துணியில், நிழலில் உலர்த்தவும்.
பிறகு மிக்சியில் அல்லது மில்லில் அரைத்து சலித்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
அரிசி மாவு மணல் போல் பக்குவம் வரும்வரை வறுக்கவும் நிறம் மாறக்கூடாது.
2. உளுந்து பொன்நிறமாகவறுத்து, அரைத்து, சலித்துக்கொள்ளவும்.
3.பொட்டுக்கடலை 2 அல்லது 3 நிமிடம் வறுத்து, அரைத்து, சலித்துக்கொள்ளவும்.
4. கடலைப்பருப்பு 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
5. பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில், மேல் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் சேர்த்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
6.சிறு எலுமிச்சம்பழம் அளவு உருண்டைகளாக வகுந்து உள்ளங்கையில் அல்லது எண்ணெய் தடவிய தாளில் தட்டிக்கொள்ளவும். முள் கரண்டி கொண்டு ஆங்காங்கே குத்தி தயாராக வைத்துக்கொள்ளவும்.
7. வாணலியில் எண்ணெய் காயவைத்து, தட்டிய தட்டை முறுக்கை மெதுவாக போட்டு இரு புறமும் பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுக்கவும்.
தட்டை முறுக்கு தயார்.