செட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல்/Pumpkin Kooti Avithal

செட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல் :
சமையல் சுவையாக, எளிமையாக இருக்க வேண்டும், சில நிமிடங்களில் அற்புதமாக அசத்த வேண்டுமா? சமைப்பதே தெரியாமல் சில நிமிடத்தில் செய்திடலாம் இந்த பரங்கிக்காய் கூட்டி அவித்தல். இதன் பெயரே செய் முறை கூறும், எல்லாவற்றையும் ஒன்றாக கூட்டி அவித்தல் அவ்வளவுதான். இது செட்டிநாட்டில் பல விருந்துகளில் முக்கியமாக பரிமாறப்படும் ஒன்று குறிப்பாக, கோவில் வைபவ விருந்துகளில் இது செய்வதுண்டு பூசைக்கு வடிப்பது ஒரு முக்கிய அம்சம் அதில் இது கண்டிப்பாக இடம்பெறும் அனைவராலும் விரும்பி கேட்டு உண்ணும் கறி வகை

செய்முறை :
பரங்கிக்காய்-250 கிராம் தோல் நீக்காமல் பெரிய துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
சின்ன வெங்காயம்-15, வெட்டி வைத்துக்கொள்ளவும்
பூண்டு-3, வெட்டி வைத்துக்கொள்ளவும்
தக்காளி-1, வெட்டி வைத்துக்கொள்ளவும்
கறிவேப்பிலை 2 கொத்து

புளி தண்ணீர்- 1 எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் பொடி-3 தேக்கரண்டி (சாம்பார் மசாலா பொடி)

https://www.chettinadsnacksonline.com/collections/masala-podi/products/sambar-milagai-podi
சோம்பு, சீரகம் -1 தலா தேக்கரண்டி
வெந்தயம்-சிறிது
எண்ணெய் -3 தேக்கரண்டி
வெல்லம் சிறு துண்டு
செய்முறை:
இது தாளிக்கவோ, எண்ணெயில் வதக்கவோ, தேவையில்லை, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறவும், இது கெட்டியாக இருக்க வேண்டும் அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, உப்பு, புளி தண்ணீர், மிளகாய் தூள் மஞ்சள் தூள், சோம்பு, சீராகம், கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும், தண்ணீர் 1 கோப்பை எல்லாம் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.(பரங்கிக்காய் சீக்கிரம் வெந்துவிடும் அளவாக தண்ணீர் சேர்த்தால் போதுமானது)
தண்ணீர் அதிகம் தேவியில்லை இது சற்று சேர்ந்தார்ப்போல் இருக்க வேண்டும் நீர்க இருக்க கூடாது.
நன்கு வெந்து குழம்பு சுண்டி வரும்போது வெல்லம் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்து இறக்கி பரிமாறலாம். சுவையும் மனமும் அற்புதமாக இருக்கும் . உடன் வடித்த சத்தம் சேர்த்து அல்லது துணை காயாக கூட பரிமாறலாம். 5 நிமிடத்தில் தயார்!

கோதுமை இட்லி/Wheat Idli

கோதுமை இட்லி :
மிருதுவான கோதுமை இட்லி,
இட்லி நமது பிரதானமான உணவாக இருப்பினும் பெரும்பாலானோர் தவிர்த்திடுவார் காரணம் இதற்கு ஏதுவான துணை சேர்ப்பதில்லை என்றே கூறலாம், தொட்டுக்கொள்வதற்கு சட்னி, சாம்பார் இன்னும் நிறைய சுவையான பதார்த்தங்கள் துணை சேர்ப்பின் இட்லி ஒரு அருமையான பலகாரம். இயற்கையாக புளிக்க வைத்து, ஆவியில் வேகவைத்து செய்வதால் இதன் சத்து இன்னும் அதிகமாகிறது, எளிதில் ஜீரணிக்க கூடியது. இதுவே கோதுமை சேர்த்து செய்யும் பொழுது இன்னும் சிறப்பாகிறது, சந்தேகமில்லாமல் சுவை கூடுதலாகவே இருக்கும்.
சுவையாக கோதுமை இட்லி எப்படி பஞ்சு போல செய்து அசத்தலாம்னு பார்க்கலாம்.

ஆரோக்கியச்சிறப்பு -பாசிப்பருப்பு பச்சடி, சிவப்பு /முளை கீரை பொரியல்


செய்யத்தேவையான பொருட்கள்:

கோதுமை-1 கோப்பை ( இங்கு நான் பஞ்சாபி கோதுமை சேர்த்து செய்தேன், சம்பா கோதுமையும் சேர்க்கலாம்).
இட்லி அரிசி-1 கோப்பை (அல்லது சிவப்பரிசி, சிறுதானிய மாப்பிள்ளை சம்பா, மூங்கில் அரிசி போன்ற ஏதேனும் ஒன்று கூட சேர்க்கலாம்)
முழு உளுந்து-1/4 கோப்பை
வெந்தயம்-1 1/2 தேக்கரண்டி
கல் உப்பு-2 தேக்கரண்டி
செய்முறை:
1. அரிசி, கோதுமை இரண்டையும் நன்கு தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. உளுந்து மற்றும் வெந்தயம் இரண்டையும் அலசி தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
3. கிரைண்டரில் உளுந்தையும் வெந்தயத்தயும் முதலில் அரைத்தெடுத்துக்கொள்ளவும், பின்னர் ஊறவைத்த அரிசியும் கோதுமையும் அரைக்கவும். எல்லாவற்றையும் மொத்தமாக சேர்த்து அரைக்கலாம் இருப்பினும் இப்படி தனியாகஅரைத்தால் அதிக மிருதுவாக இருக்கு.
4. இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து உப்பு கலந்து கையினால் நன்கு ஒரு நிமிடம் கலந்து விடவும், இட்லி மாவு கலப்பது போன்று கலக்கவும் இது மாவு இயற்கையாக புளித்து வருவதற்கு உதவுகிறது.

5. பின்னர், 6 முதல் 8 மணி நேரம் கழித்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்து, உடன் சுவையான சாம்பாருடன் பரிமாறவும்.

குறிப்பு
கோதுமைக்கு பதிலாக கோதுமை ரவையும் சேர்த்து செய்யலாம்.

வத்தல் சாதப்பொடி/Vathal Rice mix

வத்தல் சாதப்பொடி
சுண்ட வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் சேர்த்து செய்யும் அற்புதமான, ஆச்சரியமூட்டும் சத்துக்கள் அடங்கிய சாதப்பொடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகிட நம் முன்னோர்கள் பின்பற்றிய அற்புத சக்தி, இயற்க்கை உணவு வகை இந்த பொடி செய்வதும் சுலபம், சேர்க்கும் பொருட்களும் குறைவே. சாதாரணமாக வத்தல் குழம்பில் சேர்க்கும் பொது பெரும்பாலும் அதை அகற்றி விட்டே உட்கொள்கிறோம் வத்தலின் முழுமையான சத்து நமக்கு உள்ளே சேருவது இல்லை இதன் அருமை தெரியாமல் நாம் அதன் சுவை கருதி அகற்றி விடுகிறோம் ஆனால் இதன் உண்மையான சத்துக்கள் நாம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது சில குறிப்புகள் இங்கே,

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைத் தவிர, உயர்தர புரதங்கள், இதன் உணவு இழைகள் அடர்த்தியாக நிரம்பியுள்ளன. இது இயற்கையாகவே கார்ப்ஸ், கலோரிகள், கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது, இது எடை இழப்பு உணவுகளில் இணைவதற்கு ஏற்றதாக அமைகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது

இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது

நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது

மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது

இதய ஆரோக்கியம் தருகிறது

காய்ச்சலை திறம்பட எதிர்த்து நிற்கிறது

சிறுநீரக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது

நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு சக்தியை கொடுக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சக்தியாகும். சூப்கள், கறி, பருப்பு போன்ற பல உணவுகளை சமைப்பதில் இதைப் பயன்படுத்தலாம், மேலும் உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் சுவையூட்டப்பட்ட உலர்ந்த வகையாகவும் உட்கொள்ளலாம். உங்கள் வழக்கமான உணவில் சேர்க்கவும், அது வழங்கும் அற்புதமான ஆரோக்கிய சலுகைகளை முழுமையாக பெறலாம்.

சாதப்பொடி :

பொடி வகையாக செய்யும் பொது உட்கொள்ளும் அளவு சற்று அதிகமாகும், முழுமையான சக்திகளையும் பெற உதவும் சற்று கசப்பு சுவைத்தான், எனினும் நெய்யோடு சேர்த்து உண்ணும் போது அதிகம் தெரியாது பாவற்காய் போன்றே இருக்கும், தேவைப்பட்டால் இங்கு குறிப்பிட்ட அளவிற்கு சற்று அதிகமாக பருப்பு சேர்த்துக்கொள்ளலாம் கசப்புத்தன்மையை குறைக்க உதவும். இதோ கீழே செய்முறை.
செய்யத்தேவையான பொருட்கள்:
சுண்ட வத்தல் – 50 கிராம் பக்குவமான முறையில் செய்த வத்தல் பெற்றி

Https://www.chettinadsnacksonline.com/collections/vathal/products/sundakkai-vathal

 • (மிளகு தக்காளி வத்தல்)-25 கிராம்
 • மணத்தக்காளி வத்தல்-25கிராம்
 • உளுத்தம் பருப்பு-50 கிராம்
 • மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்-3,4
 • மிளகு-1/2 தேக்கரண்டி
 • சீரகம் ஒரு தேக்கரண்டி
 • கறிவேப்பிலை ஒரு பிடி
 • பெருங்காயம்-1/4 தேக்கரண்டி
 • உப்பு சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.
vatthal

செய்முறை:
வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம், வறுக்கவும் இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வருத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடி யாக அரைத்துக்கொள்ளவும்.

சூடான சாதத் தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிடவும், ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திடவும்.

https://youtu.be/0vlMSuWcISA

வேங்கரிசி மாவு/Vengarisi Mavu

வேங்கரிசி மாவு :
வேங்கரிசி மாவு அல்லது சத்து மாவு,
செட்டிநாட்டு வீடுகளில் இது முக்கியமாக வைத்திருப்பது பழக்கம், காரணம் இதன் சிறப்பு பயன்கள், இது அரிசி அல்லது நெல் (வெள்ளை அல்லது சிவப்பு) பக்குவமாக ஒரு கொதி வேகவைத்து, வெயிலில் காய வைத்து, பொரித்து அரைக்கப்படுவதால் இது வேங்கரிசி மாவு, பொரிமாவு அல்ல. இதை அப்படியே இனிப்பு அல்லது உப்பு சுவை சேர்த்து சாப்பிடலாம். முற்காலத்தில் கடல் கடந்து வணிகப் பயணம் செல்லும் சமயம் இதை முக்கியமாக கொண்டு செல்வதுண்டு.

இந்த மாவு பெற்றிட- https://www.chettinadsnacksonline.com/collections/flour-items/products/vengarisi-mavu?variant=36593994498209

பயன்கள்:

1.எளிதில் ஜீரணிக்க கூடியது,

2. சுலபமாக கலந்து சாப்பிட வசதியானது, சமைக்கத்தேவையில்லை

மோர் மற்றும் உப்பு அல்லது நெய் சர்க்கரை, தண்ணீர் கலந்தும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடலாம்.

3. பசி நிறைந்து திருப்தி தரக்கூடியது,

4. பல நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்

என பல நன்மைகள் நிறைந்தது என்பதால் இதை எல்லோரும் வீட்டில் வைத்திருப்பது உண்டு. மேலும் இது சமையலில் கெட்டித்தன்மை பெருவதற்காக சேர்ப்பதுண்டு பக்குவமாய் பொரித்து அரைப்பதால் நல்ல மணம் கொண்டது. செட்டிநாட்டு பகுதிகளில் வேங்கரிசி பொரிப்பதற்காகவே தனி ஆலைகள் உண்டு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவது உண்டு. அக்காலத்தில் இதுவே இன்றைய “நெஸ்டம்” காய்ச்சல், வயிற்று உபாதைகள் என பல சமயங்களில் இது கை கொடுக்கும் ஆகாரமாகும்.

இதே பக்குவத்தில் பெற்றிட சொடுக்கவும்.https://www.chettinadsnacksonline.com/collections/flour-items/products/vengarisi-mavu?variant=3659399449820

வீட்டில் வெண்ணை காய்ச்சினால் மணக்கும், ரொம்ப சந்தோசமாக இருக்கும் ஏன் தெரியுமா? நெய் காய்ச்சி எடுத்து விட்டு அதில் வேங்கரிசி மாவு, சர்க்கரை கலந்து எல்லோருக்கும் கொடுப்பார்கள் ரொம்ப சுவையாக இருக்கும், இன்றும் அதே சுவையில்…


தண்ணீர் சர்க்கரை சேர்த்து பிசைந்தது, சிவப்பரிசி வேங்கரிசி மாவு

பானகம்/Panakam

பானகம் : அகத்திற்கு உகந்த பானம்

சிறப்பறிவோம் செய்து பழகுவோம்:
பானகம், நீர் மோர் போன்ற வெயில் கால குளிர் பானங்கள் தாகம் தீர்ப்பது மட்டுமல்ல நமது உடல் சூட்டை தவிர்த்து நல்ல புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் தரவல்லது வெயிலினால் ஏற்படும் சோர்வைத்தவிர்க்க இவை மிகவும் அருமையான பானம், வயிற்று வலி, நீர் கடுப்பு கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் குறைக்க வல்லது. முக்கியமாக பானக்கம் வெல்லம், சுக்கு, எலுமிச்சை சாறு, சேர்ப்பதால் ருசியும் நன்றாக இருக்கும் , பொதுவாக, கோவில் விசேடங்கள், தேர், திருவிழா சமயங்களில் தண்ணீர் பந்தல் வைத்து விநியோகம் செய்வதுண்டு.
செய்வது சுலபம், கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்களை விட இப்படி கலந்த பருகுவது உடலுக்கும் , மனதிற்கும் பல நன்மைகளை பெறுக்கிடும் என்பது நம் பழக்கத்திலிருந்து கண்டறியப்பட்ட உண்மை. சிறு கவனம் பெரிய நன்மை அருமை புரிந்து நம் சந்ததியினருக்கு உணர்த்துவோம். பானகம் லெமனேடுக்கு மற்றுமோர் பெயர் எனலாம்.


செய்யத்தேவையான பொருட்கள்:
எலுமிச்சை -1 (சாறு எடுத்துக்கொள்ளவும்)
வெல்லம் பொடிதத்து-3 மேஜைக்கரண்டி
சுக்கு தூள்-1/4 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் -1/4 தேக்கரண்டி
தண்ணீர் 2 கோப்பை (400மில்லி )
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடி தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்,(வெல்லத்தில் சிறிது உப்பு சுவை இருப்பதால் மேலும் நாம் உப்பு சேர்க்கத்தேவையில்லை)

அதில் எலுமிச்சை சாறு, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும் வடிகட்டத்தேவையில்லை அப்படியே பரிமாறலாம்.
செய்வது சுலபம், கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்களை விட இப்படி கலந்த பருகுவது உடலுக்கு, மனதிற்கும் பல நன்மைகளை பெறுக்கிடும் என்ப நம் பழக்கத்திலிருந்து கண்டறியப்பட்டது.

நடு வீட்டுக்கோலம்/Naduveettu Kolam

செட்டிநாட்டு பாரம்பரிய நடு வீட்டுக்கோலம் :
நகரத்தார்கள் வாழும் பல்வேறு ஊர்களை உள்ளடக்கிய செட்டிநாடு பகுதி, பாரம்பரியம் மிக்க, உயர்ந்த கலாச்சாரம் நிறைந்த இடமாக உலகளவில் பேசப்படும் சிறப்பு பெற்றது. முற்காலத்திலிருந்தே, கலை நுணுக்கம், சுவையான உணவு பழக்கவழக்கங்கள், எந்த மாதிரியான சூழ்நிலையிலும் சிக்கனம், சாமர்த்தியம், கட்டுப்பாடு என பலதிறன்களை உள்ளடக்கி வாழ்ந்து வந்தனர். உயர்ந்த அர்த்தங்களோடு முன்னோர்கள் வழி வந்த சில வாழ்க்கை முறையே அதற்கு இன்றும் அடையாளமாக உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில், இந்த நடு வீட்டுக்கோலம் மிகுந்த அர்த்தங்கள் கொண்டது என்பதை உணரும் போது ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக உள்ளது. இறையருளோடு வளமான வாழ்க்கை வாழவும், செல்வச் செழிப்பு, குடும்பப் பிணைப்பு, ஒற்றுமை என ஒவ்வொரு அவையங்களையும் கருத்தில் கொண்டு முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டதை இந்த கோலத்தின் மூலம் நாம் காணலாம்.

குடும்பம் (வீடு) இப்படியாக இருக்க வேண்டும் என்பதை கோலத்தில் உள்ளடங்கிய அர்த்தங்களோடு படைத்திட்டனர்.

அனுபவம் மிகுந்த சில ஆச்சிமார்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளோம்

நடு வீட்டுக்கோலத்தில் உள்ளடங்கிய கருத்துக்கள்:

வடிவம்: சதுரம் – உயர்வு, தாழ்வு, ஏற்ற இறக்கம் என எந்த கருத்து வேறுபாடும் இல்லாத சம வடிவம் சதுரம் என்பதால் குடும்பத்தில் வேறுபாடு இல்லாத ஒரு நிலை வளர வேண்டி இந்த வடிவத்தில் கோலம் அமைக்கப்பட்டுள்ளது.

நிறம்: வெள்ளை– வெள்ளை நிறமானது பெரும்பாலும் முழுமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
தூய்மை மற்றும் தியாகத்தின் சின்னம் என்பதால், குடும்பத்தில் உள்ளோர் இப்படிப்பட்ட நல்ல குணங்களுடன் விட்டுக்கொடுத்து தூயமனத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டி அமைக்கப்பட்டது,

கோலம் போடும் மாவு: பயன்படுத்தப்படும் பொருள் பச்சரிசி
பச்சரிசியை சுத்தமாக அலசி ஊறவைத்து, நல்ல விழுதாக அரைத்து, வில்லையாகத் தட்டி, காயவைத்து கோலமிட பயன்படுத்துவர்.
தேவைக்கு ஏற்ப சில வில்லைகள் எடுத்து பக்குவமாய் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து கோலமிடுவது சிறப்பு. எறும்புகளுக்கும் உணவாகும்.

கோல மாவு வில்லைகள்

கோலத்தின் முக்கிய அம்சங்கள்: சதுர வடிவமாகவும், 4 தேர்கள் (முக்கோண வடிவம்) வீட்டின் மேற்கூரைகளாகவும்,கால்களை விட சற்று பெரிதாக இட வேண்டும். அரண்மனை போன்ற கட்டிட அமைப்பு ராஜ பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று கருத்தில் கொள்ளலாம்,

வெளி கோட்டமைப்பு:

8 கால்கள் (அஷ்ட பாலகர்களாக கருதப்படுகிறது) 8 திக்கும் இருந்து நல்ல செய்திகளை ஈர்க்கும் சக்தி படைத்திடவும், கோலத்தின் கட்டத்திற்கு உள்ளே, அலை அலையாய் உள்ள நெளிகள் ஆறுபோல் பெருகி அருவிபோல் தழைத்திட, என்ற கருத்தாகும். மிக முக்கியமாக கோலத்தை சுற்றி இரட்டை புள்ளிகள் இட்டிட வேண்டும். புள்ளிகள் என்பது நகரத்தார் இன விருத்தியைக் குறிப்பிடுகிறது. ஆகவே, புள்ளிகள் பெருகிடவும் இணைந்து வாழ்ந்திடவும் இங்கு வடிவங்களாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

கோலத்தின் நான்கு மூலைகளிலும் சங்கு, அல்லது சக்கரம் இடுவர். இது தெய்வாம்சம் பொருந்தியதாக கூறப்படுகின்றது. மற்றுமொரு கருத்து கடல் கடந்து வணிகம் (பொருளீட்டி) செய்துவரும் ஆண்மக்கள் சுகமே திரும்பி வீடு வந்தடைய விரும்பி இடப்படுகின்றது.
கோலத்தின் நான்கு பக்கமும் சக்கரவடிவில் முக்காலி அல்லது துணை கோலம் என்பர் இது வீட்டின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

எப்போது போடலாம்: கோவில் நிகழ்வுகள், சுப நிகழ்ச்சி, திருமண வீடு, விசேட நாட்களில் இதை முக்கிய கோலமாக இடுவர்.

நடு வீட்டுக்கோலத்தின் வகை : நடு வீடு என்பது இங்கு பூஜை அறை ஆகும், நடு வீட்டுக்கோலம் என்பது வீட்டின் நடுவே என்று பொருள் படுத்துவதைவிட சுப நிகழ்ச்சி நடந்திடும் வீடு / இடம் என்று கருத்தில் கொள்ளலாம்.
இது நடு வீட்டுக்கோலம், பொங்கல் கோலம், அடுப்புக்கோலம், மனைக்கோலம், ஆகிய வகைகளில் இடுவது வழக்கம்.

உள் அமைப்பு, அடைப்பு வடிவங்கள்:

கோலத்தின் உள்ளே இடப்படும் அடைப்பு வடிவங்கள் முற்காலத்தில் கடல் கடந்து வணிகத்தொழில் செய்து வந்தமையால் பொதுவாக கடல் சார்ந்த வடிவங்களாக, மீன், மீன் செதில்கள், சங்கு, தாமரை, கடல் அலைகள் போன்ற வடிவங்களை கருத்தில் கொண்டு கோலத்தில் பிரதிபலிப்புகளாக வடிவமைத்தனர்.
பின்னர் அது சில மாற்றங்களுடன் அந்தந்த வைபவங்களுக்கு ஏற்றது போல் வடிவங்கள் அமைக்கப்படுகிறது. உதாரணமாக, கல்யாண வீட்டுக்கோலத்தில் – மாலைகள், மலர்கள், சங்கு, பூச்செண்டு இடுவர்.கோவில்களில் முருகனுக்கு: விளக்கு, மயில், வேல், சேவல், மலர் எனவும், பெருமாளுக்கு: சங்கு, சக்கரம், இலக்குமிக்கு: தாமரை, கலசம் போன்ற வடிவமாக இந்த கோலத்தில் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

வரைபட விளக்கம்:

 1. வெளிப்புற சதுரக்கோடு
 2. உட்புற சதுரக்கோடு
 3. தேர் (நாற்புறமும்)
 4. உள்ளடைப்பு இரண்டு கோடுகளுக்கு இடையே நெளியும், வீட்டினுள் விருப்பத்திற்கு ஏற்ப அல்லது வைபவங்களுக்கு ஏற்றார் போல் வடிவங்கள் அமைக்கலாம்.
 5. கால்கள் (8 நாற்புறமும் நெளி, கட்டம், தோரணம் போன்ற உள்ளடைப்புகள் போடலாம் )
 6. தாமரை (நாற்புறமும்)
 7. சங்கு (நாற்புறமும்)
 8. முக்காலி /துணைக்கோலம் (நாற்புறமும்)
 9. இரட்டை புள்ளி அமைத்தல் (கோலத்தை சுற்றிலும் இடைவிடாமல் இரண்டு வரிசை புள்ளி குத்துதல்)

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், நகரத்தார்கள் கலைநுணுக்கம், தெய்வபக்தி, குடும்ப ஒற்றுமை என நற்பண்புகள் நிறைந்த வளமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தனர். அதன் வழி நாம் பின்பற்றி பெருமை கொள்வோமாக.

கோலத்தின் ஆராய்ச்சி பற்றி ஏதும் கருத்துக்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ள வேண்டியது

நன்றி

சில படங்கள் கூகுள் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

கருப்பு உளுந்தங்களி

கருப்பு உளுந்தங்களி: To read Recipe in English click the link herehttps://wp.me/p1o34t-1Hd
இதை ஏன் நாம் களி என்கிறோம்?
மென்மையான விழுது போன்றது வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும் இனிப்பு சுவை கொண்டது எளிதில் ஜீரணிக்கக்கூடியது இந்த களி வகை உணவு பதார்த்தங்கள்.
அந்த வகையில் கருப்புளுந்து களி சுவை மட்டுமல்லாமல் எலும்பு மற்றும் உடலுக்கு பல விதங்களில் அதிக பலம் கொண்டது குறிப்பாக பெண்கள் பூப்படையும் சமயத்தில் இதை நல்லெண்ணெயில் செய்து உட்கொள்வது மிகச்சிறப்பு வாய்ந்தது, எலும்புக்கும், கருப்பைக்கு உறுதியளிக்க வல்லது கருப்பட்டியில் செய்வதால் இரும்புசத்து மிகுந்து ரத்தப்போக்கை சீர்செய்யவல்லது.


செய்யத்தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து-1 கோப்பை
பச்சரிசி-1 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் -2 மேஜைக்கரண்டி (நெய் 1 மேஜைக்கரண்டி சுவை சேர்க்க)
கருப்பட்டி-1/2 கோப்பை
வெல்லம் -1/4 கோப்பை
(கருப்பட்டி மட்டும் சேர்த்தும் செய்யலாம் )
செய்முறை:
முதலில் உளுந்தை மனம் வரும் வரை வருத்துக்கொள்ளவும், அரிசியையும் வருத்து இரண்டையும் சேர்த்து நல்ல மென்மையான மாவாக பொடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, கருப்பட்டி, வெல்லம் சேர்த்து 1 கோப்பை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும் கொதிக்கும் சமயம் இறக்கி வடிகட்டி சிறிது ஆறவைத்துக்கொள்ளவும். (இப்படி செய்யும் போது மாவு கட்டி தட்டாமல் இருக்கும்)
வைத்துள்ள வெல்லப்பாகில் மாவை சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து பின்னர் அடுப்பில் இளந்தீயில் வைத்து கிளரவும்.
இடை இடையே நல்லெண்ணெய் சேர்த்து கட்டி தட்டாமல் களி பக்குவத்திற்கு வரும் வரை கிளறி இறக்கவும்
வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் சமயம் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையும் மனமும் சிறப்பாக இருக்கும்.
குறிப்பு:
நல்லெண்ணெய் செக்கு எண்ணெய் நல்லது, கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்தும் செய்யலாம் கருப்பு உளுந்து இன்னும் சிறப்பு.
இந்த மாவை வருத்து, அரைத்து, சலித்து, வைத்துக்கொண்டு தேவைப்படும் சமயம் களி செய்யலாம்.
கும்மாயம் மாவு செட்டிநாட்டு பக்குவத்தில் பெற கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்,

நேந்திரன் புட்டு/பொடிமாஸ்

நேந்திரன் புட்டு/பொடிமாஸ்:
குழந்தைப்பருவம் முதல் உட்கொள்ளும் சத்தான உணவு வகைகளில் ஒன்றாகக் கருதப்படுவது நேந்திரங்காய் அல்லது பழம். இது கேரளா மாநிலத்தில் அதிகமாக விளைச்சல் தரக்கூடிய ஒரு பழ வகை. இதை காயவைத்தோ அல்லது சமைத்த பக்குவத்திலோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ள தகுதியான ஒரு சத்து மிகுந்த உணவு வகையாக பழக்கத்தில் உள்ளது.
இது சிப்ஸ், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான பொடிமாஸ் வகை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம். உணவாகவும் அப்படியே சாப்பிடவும் பரிமாறலாம்.

பொடிமாஸ், இது நாட்டு வாழைக்காய் அல்லது நேந்திரங்காயிலும் செய்யலாம், முறை ஒன்றே

செய்முறை விளக்கம்:
வாழைக்காய்-2
வெங்காயம் பொடியாக நறுக்கியது -1 (பெரியது). இது பொடிமஸுக்கு சுவை கூட்டும்.
இஞ்சி-1 அங்குலம் தோல் சீவி,பொடியாக நறுக்கியது


தேங்காய் துருவல்-1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை-5
பச்சைமிளகாய்-1
மிளகுத்தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு சுவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி,
கடுகு-1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு-1/2 தேக்கரண்டி
சீரகம்-1/4 தேக்கரண்டி
செய்முறை:
வாழைக்காயை ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து (தோல் நிறம் கருப்பாக மாறிவிடும்) எடுத்துக்கொள்ளவும், சூடு ஆறியபின் தோல் உரித்து உதிர்த்தோ, அல்லது துருவியோ வைத்துக்கொள்ளலாம். (இங்கு படத்தில் உதிர்த்து காண்பிக்கப்பட்டுள்ளது).

பிறகு, வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்து, அரிந்து வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். சற்று வெந்ததும், கறிவேப்பிலை சேர்த்து உதிர்த்த வாழைக்காய் சேர்த்து உப்பு தூவி கிளறி விடவும். மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடம் மூடிவைத்து ஒன்றுசேர்ந்து வேகவிடவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம். இது வறுவலாக புட்டு பதத்திற்கு இருக்க வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைப்பதிற்கு முன்பாக மிளகுத்தூள், துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். சுவையும் மனமும் பிரமாதமாக இருக்கும்.

தயிர் அல்லது ரசம் சாதத்துடன் வாழைக்காய் பொடிமாஸ் அசத்தல்

Valaikkai Podimas