மொறு மொறு பக்கோடா :
மொறு மொறு வெங்காய பக்கோடா நொடியில் தயாராகும் இடை பலகாரம். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், விருந்தாளிகள், என அனைவரையும் உங்கள் கை வண்ணத்தால் அசத்துங்கள்.
இதோ செய்முறை
செய்யத்தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கோப்பை (100 கிராம்)
அரிசி மாவு 1/2 கோப்பை (50 கிராம்)
பெரிய வெங்காயம் – 2 பெரியது
கறிவேப்பிலை -3 கொத்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
பச்சை மிளகாய் – 2 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
உப்பு- 1/4 தேக்கரண்டி
சோம்பு- 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
1. பெரிய வெங்காயம் நீள வாக்கில் வெட்டிவைத்துக்கொள்ளவும்
2. பச்சைமிளகாய், கறிவேப்பிலை பொடியாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
3.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள், சோம்பு- 1/2 தேக்காரண்டி சேர்த்து நன்கு பிசையவும்.
4. பின்னர், மாவு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசறிக்கொள்ளவும். எண்ணெய், பக்கோடா மொறு மொறுப்பாக வர உதவும்.
5.தேவைப்பட்டால் 1 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து மாவு வெங்காயத்தில் பரவும் படி பிசறி ரெடியாக வைத்துக்கொள்ளவும்.
6. வாணலியில் எண்ணெய் காயவைத்து பக்கோடாவை சிறிது சிறிதாக பரவலாக போட்டு பொறித்தெடுக்கவும்.
சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா தயார். சூடான டீ, காப்பியுடன் பரிமாறவும்.