குடும்பம் (வீடு) இப்படியாக இருக்க வேண்டும் என்பதை கோலத்தில் உள்ளடங்கிய அர்த்தங்களோடு படைத்திட்டனர்.
அனுபவம் மிகுந்த சில ஆச்சிமார்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளோம்
நடு வீட்டுக்கோலத்தில் உள்ளடங்கிய கருத்துக்கள்:
வடிவம்: சதுரம் – உயர்வு, தாழ்வு, ஏற்ற இறக்கம் என எந்த கருத்து வேறுபாடும் இல்லாத சம வடிவம் சதுரம் என்பதால் குடும்பத்தில் வேறுபாடு இல்லாத ஒரு நிலை வளர வேண்டி இந்த வடிவத்தில் கோலம் அமைக்கப்பட்டுள்ளது.
நிறம்: வெள்ளை– வெள்ளை நிறமானது பெரும்பாலும் முழுமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
தூய்மை மற்றும் தியாகத்தின் சின்னம் என்பதால், குடும்பத்தில் உள்ளோர் இப்படிப்பட்ட நல்ல குணங்களுடன் விட்டுக்கொடுத்து தூயமனத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டி அமைக்கப்பட்டது,
கோலம் போடும் மாவு: பயன்படுத்தப்படும் பொருள் பச்சரிசி
பச்சரிசியை சுத்தமாக அலசி ஊறவைத்து, நல்ல விழுதாக அரைத்து, வில்லையாகத் தட்டி, காயவைத்து கோலமிட பயன்படுத்துவர்.
தேவைக்கு ஏற்ப சில வில்லைகள் எடுத்து பக்குவமாய் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து கோலமிடுவது சிறப்பு. எறும்புகளுக்கும் உணவாகும்.
கோலத்தின் முக்கிய அம்சங்கள்: சதுர வடிவமாகவும், 4 தேர்கள் (முக்கோண வடிவம்) வீட்டின் மேற்கூரைகளாகவும்,கால்களை விட சற்று பெரிதாக இட வேண்டும். அரண்மனை போன்ற கட்டிட அமைப்பு ராஜ பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று கருத்தில் கொள்ளலாம்,
வெளி கோட்டமைப்பு:
8 கால்கள் (அஷ்ட பாலகர்களாக கருதப்படுகிறது) 8 திக்கும் இருந்து நல்ல செய்திகளை ஈர்க்கும் சக்தி படைத்திடவும், கோலத்தின் கட்டத்திற்கு உள்ளே, அலை அலையாய் உள்ள நெளிகள் ஆறுபோல் பெருகி அருவிபோல் தழைத்திட, என்ற கருத்தாகும். மிக முக்கியமாக கோலத்தை சுற்றி இரட்டை புள்ளிகள் இட்டிட வேண்டும். புள்ளிகள் என்பது நகரத்தார் இன விருத்தியைக் குறிப்பிடுகிறது. ஆகவே, புள்ளிகள் பெருகிடவும் இணைந்து வாழ்ந்திடவும் இங்கு வடிவங்களாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
கோலத்தின் நான்கு மூலைகளிலும் சங்கு, அல்லது சக்கரம் இடுவர். இது தெய்வாம்சம் பொருந்தியதாக கூறப்படுகின்றது. மற்றுமொரு கருத்து கடல் கடந்து வணிகம் (பொருளீட்டி) செய்துவரும் ஆண்மக்கள் சுகமே திரும்பி வீடு வந்தடைய விரும்பி இடப்படுகின்றது.
கோலத்தின் நான்கு பக்கமும் சக்கரவடிவில் முக்காலி அல்லது துணை கோலம் என்பர் இது வீட்டின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
எப்போது போடலாம்: கோவில் நிகழ்வுகள், சுப நிகழ்ச்சி, திருமண வீடு, விசேட நாட்களில் இதை முக்கிய கோலமாக இடுவர்.
நடு வீட்டுக்கோலத்தின் வகை : நடு வீடு என்பது இங்கு பூஜை அறை ஆகும், நடு வீட்டுக்கோலம் என்பது வீட்டின் நடுவே என்று பொருள் படுத்துவதைவிட சுப நிகழ்ச்சி நடந்திடும் வீடு / இடம் என்று கருத்தில் கொள்ளலாம்.
இது நடு வீட்டுக்கோலம், பொங்கல் கோலம், அடுப்புக்கோலம், மனைக்கோலம், ஆகிய வகைகளில் இடுவது வழக்கம்.
உள் அமைப்பு, அடைப்பு வடிவங்கள்:
கோலத்தின் உள்ளே இடப்படும் அடைப்பு வடிவங்கள் முற்காலத்தில் கடல் கடந்து வணிகத்தொழில் செய்து வந்தமையால் பொதுவாக கடல் சார்ந்த வடிவங்களாக, மீன், மீன் செதில்கள், சங்கு, தாமரை, கடல் அலைகள் போன்ற வடிவங்களை கருத்தில் கொண்டு கோலத்தில் பிரதிபலிப்புகளாக வடிவமைத்தனர்.
பின்னர் அது சில மாற்றங்களுடன் அந்தந்த வைபவங்களுக்கு ஏற்றது போல் வடிவங்கள் அமைக்கப்படுகிறது. உதாரணமாக, கல்யாண வீட்டுக்கோலத்தில் – மாலைகள், மலர்கள், சங்கு, பூச்செண்டு இடுவர்.கோவில்களில் – முருகனுக்கு: விளக்கு, மயில், வேல், சேவல், மலர் எனவும், பெருமாளுக்கு: சங்கு, சக்கரம், இலக்குமிக்கு: தாமரை, கலசம் போன்ற வடிவமாக இந்த கோலத்தில் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
வரைபட விளக்கம்:
- வெளிப்புற சதுரக்கோடு
- உட்புற சதுரக்கோடு
- தேர் (நாற்புறமும்)
- உள்ளடைப்பு இரண்டு கோடுகளுக்கு இடையே நெளியும், வீட்டினுள் விருப்பத்திற்கு ஏற்ப அல்லது வைபவங்களுக்கு ஏற்றார் போல் வடிவங்கள் அமைக்கலாம்.
- கால்கள் (8 நாற்புறமும் நெளி, கட்டம், தோரணம் போன்ற உள்ளடைப்புகள் போடலாம் )
- தாமரை (நாற்புறமும்)
- சங்கு (நாற்புறமும்)
- முக்காலி /துணைக்கோலம் (நாற்புறமும்)
- இரட்டை புள்ளி அமைத்தல் (கோலத்தை சுற்றிலும் இடைவிடாமல் இரண்டு வரிசை புள்ளி குத்துதல்)
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், நகரத்தார்கள் கலைநுணுக்கம், தெய்வபக்தி, குடும்ப ஒற்றுமை என நற்பண்புகள் நிறைந்த வளமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தனர். அதன் வழி நாம் பின்பற்றி பெருமை கொள்வோமாக.
கோலத்தின் ஆராய்ச்சி பற்றி ஏதும் கருத்துக்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ள வேண்டியது
நன்றி
சில படங்கள் கூகுள் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.