கோதுமை இட்லி :
மிருதுவான கோதுமை இட்லி,
இட்லி நமது பிரதானமான உணவாக இருப்பினும் பெரும்பாலானோர் தவிர்த்திடுவார் காரணம் இதற்கு ஏதுவான துணை சேர்ப்பதில்லை என்றே கூறலாம், தொட்டுக்கொள்வதற்கு சட்னி, சாம்பார் இன்னும் நிறைய சுவையான பதார்த்தங்கள் துணை சேர்ப்பின் இட்லி ஒரு அருமையான பலகாரம். இயற்கையாக புளிக்க வைத்து, ஆவியில் வேகவைத்து செய்வதால் இதன் சத்து இன்னும் அதிகமாகிறது, எளிதில் ஜீரணிக்க கூடியது. இதுவே கோதுமை சேர்த்து செய்யும் பொழுது இன்னும் சிறப்பாகிறது, சந்தேகமில்லாமல் சுவை கூடுதலாகவே இருக்கும்.
சுவையாக கோதுமை இட்லி எப்படி பஞ்சு போல செய்து அசத்தலாம்னு பார்க்கலாம்.
ஆரோக்கியச்சிறப்பு -பாசிப்பருப்பு பச்சடி, சிவப்பு /முளை கீரை பொரியல்
செய்யத்தேவையான பொருட்கள்:
கோதுமை-1 கோப்பை ( இங்கு நான் பஞ்சாபி கோதுமை சேர்த்து செய்தேன், சம்பா கோதுமையும் சேர்க்கலாம்).
இட்லி அரிசி-1 கோப்பை (அல்லது சிவப்பரிசி, சிறுதானிய மாப்பிள்ளை சம்பா, மூங்கில் அரிசி போன்ற ஏதேனும் ஒன்று கூட சேர்க்கலாம்)
முழு உளுந்து-1/4 கோப்பை
வெந்தயம்-1 1/2 தேக்கரண்டி
கல் உப்பு-2 தேக்கரண்டி
செய்முறை:
1. அரிசி, கோதுமை இரண்டையும் நன்கு தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. உளுந்து மற்றும் வெந்தயம் இரண்டையும் அலசி தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
3. கிரைண்டரில் உளுந்தையும் வெந்தயத்தயும் முதலில் அரைத்தெடுத்துக்கொள்ளவும், பின்னர் ஊறவைத்த அரிசியும் கோதுமையும் அரைக்கவும். எல்லாவற்றையும் மொத்தமாக சேர்த்து அரைக்கலாம் இருப்பினும் இப்படி தனியாகஅரைத்தால் அதிக மிருதுவாக இருக்கு.
4. இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து உப்பு கலந்து கையினால் நன்கு ஒரு நிமிடம் கலந்து விடவும், இட்லி மாவு கலப்பது போன்று கலக்கவும் இது மாவு இயற்கையாக புளித்து வருவதற்கு உதவுகிறது.
5. பின்னர், 6 முதல் 8 மணி நேரம் கழித்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்து, உடன் சுவையான சாம்பாருடன் பரிமாறவும்.
குறிப்பு
கோதுமைக்கு பதிலாக கோதுமை ரவையும் சேர்த்து செய்யலாம்.