தெறக்கி கோசுமல்லி:
செட்டிநாடு ஸ்பெஷல் கோசுமல்லி ஒரு இதமான சுவையுடைய இட்லி, தோசைவகை தொட்டுக்கொள்ளும் பதார்த்தம் என்று சொல்லலாம். உப்பு, புளிப்பு, காரம் என எல்லா சுவையும் மிதமாக இருக்கும். அதில் இரண்டு வகையுண்டு, ஒன்று கத்தரிக்காயை அவித்து தோலுரித்து அல்லது நேரடியாக சுட்டு தோலகற்றி செய்வது மற்றொரு முறை சிறு துண்டுகளாக நறுக்கி தெறக்கி செய்வது. நாம் இங்கு காண இருப்பது இரண்டாவது முறை தெறக்கி கோசுமல்லி. ஒப்பிடும் போது இதில் சுவை கொஞ்சம் கூடுதலாகும் ஏனெனில் நறுக்கிய காய்கள் எண்ணெயில் வதக்குகிறோம் 🙂 . அவித்து செய்யும் முறை முன்பே பதிவு செய்துள்ளோம் . இது இட்லி, தோசைவகை, ஆப்பம் இவற்றிற்கு ஏதுவாகும்.

செய்யத்தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்-1/4 கிலோ
தக்காளி-1
பச்சைமிளகாய்-4 லிருந்து 7 வரை
கறிவேப்பிலை 1 கொத்து
சின்ன வெங்காயம்-10
புளிகரைத்தது – 1 மேஜைக்கரண்டி அளவு
தாளிக்க:
எண்ணெய் -5 தேக்கரண்டி
கடுகு-1/2 தே .க
உளுத்தம்பருப்பு-1/2 1/2 தே .க
செய்முறை:
1. கத்திரிக்காய் சிறு துண்டுகளாக (கூட்டுக்கு நறுக்குவது போல்) நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
2.வெங்காயம் தோலுரித்து, தக்காளி பச்சை மிளகாயையும் வெட்டி தயாராக வைக்கவும்
3.எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்து, வெங்காயம், கத்திரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.(நறுக்கிய கத்திரிக்கயை நீர் வடித்து, எடுத்து வதக்கவும்).
4. நன்கு வதங்கி தோல் நிறம்மாறி வரும்போது கறிவேப்பிலை, வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி வதங்கியதும், உப்பு, கரைத்த புளி சேர்த்து 3 கோப்பை தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
குக்கரில் வைத்தால் தண்ணீரை குறைத்துக்கொள்ளவும் ஒரு விசில் வரும்வரை விட்டு எடுக்கவும்.
6. கத்திரிக்காய் வெந்ததும் கடைந்துவிடவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்,
தெறக்கி கோசுமல்லி ரெடி