பால் பணியாரம் :
செட்டிநாடு ஸ்பெஷல் பால் பணியாரம் பெரும்பாலான விருந்துகளிலும் சிறப்பாக பரிமாறப்படும் ஒரு முக்கிய இனிப்பு வகை. அழகான வெள்ளை நிறத்தில், தேங்காய்ப்பால் மற்றும் பசும்பாலில் அளவான இனிப்பு கலந்து ஏலக்காய் அல்லது குங்குமப்பூ வாசனையோடு, பாலில் ஊறிய பூப்போன்று சுவையான பால் பணியாரம். விவரிக்க வார்த்தைகள் குறைவு சுவையோ அலாதி .

செய்முறை:
பச்சரிசி- 1 கோப்பை
உளுந்து – 1 கோப்பை
உப்பு-1/2 தேக்கரண்டி
தேங்காய் பால்- ஒரு மூடி பால்-2 கோப்பை
பசும்பால் காய்ச்சியது – 2 கோப்பை
சீனி -3.4 கோப்பை அல்லது தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்:
1. பச்சரிசி உளுந்து இரண்டையும் 2 மணி நேரம் நன்கு கழுவி ஊறவைக்கவும்.
2.நன்கு ஊறிய பின்னர் கிரைண்டரில் நல்ல விழுதாக அரைக்கவும், முழு உளுந்தோ அரிசியோ இல்லாமல் கவனமாக அரைக்கவும்.
3. மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் ஊற்றாமல் சிறிது சிறிதாக தெளித்து வடை மாவு ஆட்டுவது போல் கெட்டியாக ஆட்டவும். பந்து போல் அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும்.
4.பசும்பாலைக்காய்ச்சி, தேங்காய் பால் எடுத்து, இரண்டையும் ஒன்றாக சீனி சேர்த்து கலந்து தயாராக வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் காய வைத்து அரைத்த மாவை கையில் எடுத்து விரல்களினால் சிறு சிறு (இலந்தைப்பழம் அளவிற்கு) உருண்டைகளாக காய்ந்த எண்ணெயில் மெதுவாக போடவும்.
6. இரு புறமும் இளம் மஞ்சள் நிறம் வரும் வரை (படத்தில் காண்பது போல்) வேக விடவும்.
கவனம் இளந்தீயில் பொரித்தெடுப்பது உத்தமம்.
7.பாத்திரத்தில் 2 லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொதிக்க வைத்து தயாராக வைக்கவும்.
8.பொரித்த பணியாரத்தை சுடு நீரில் 3 நிமிடம் வரை போட்டு எடுக்கவும்.
9. நீரை நன்கு வடித்து பிறகு பணியாரத்தை கலந்த பாலில் சேர்த்து ஊர வைக்கவும்.